29/01/2025, பகவத்கீதை, பகுதி 169
- mathvan
- Jan 29
- 2 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
மன அமைதி பெற்றவன் எங்கனம் ஞானத்தின் ஊற்றுக் கண்ணாய் விளங்கும் இயற்கையோடு இணைகிறான் என்பதனைச் சுருக்கமாகச் சொல்கிறேன். – 18:50
உளத் தூய்மை கொண்ட புத்தியுடையவனாய் உறுதியுடன் உடலையும் உள்ளத்தையும் அடக்கி ஒலி முதலிய அனைத்துப் புலன் நுகர்ச்சிகளையும் தன் கட்டுக்குள் வைத்திருப்பவனாய், விருப்பு வெறுப்புகளைத் தவிர்த்து, தன்னில் அமைதி காண்பவனாய், தனிப்பட்ட ஆசைகளைத் துறந்தவனாய், மனம், மொழி, மெய்யாகிய மூன்றினையும் ஒரு நிலையில் நிறுத்திப் பற்றின்மை என்னும் வைராக்கியத்தைக் கைக் கொண்டு அகங்காரம், வலிமை, செருக்கு, காமம், சினம், உடைமை முதலிய பாவனைகளையும் ஒழித்து நான் எனது என்னும் எண்ணமில்லாதவனாய் மன அமைதி பெற்றவன் இயற்கையுடன் (பிரம்மத்துடன்) இணைவதற்கு உரியவனாகின்றான். – 18:51-53
சுருக்கமாகத் தம் கடமையைப் பற்றில்லாமல் சரிவரச் செய்பவர்கள் இயற்கையாகவே மாறிவிடுகின்றனர். இயற்கை அவர்களை விலக்குவதில்லை! அவர்கள் காலம் கடந்தும் நிற்பார்கள், பயணிப்பார்கள்!
அடுத்துவரும் சில பாடல்களில் பக்தி இணைக்கப்படுகின்றது.
அப்பாடல்களுக்கு மகாகவி பாரதியின் உரைகளை அப்படியே வழங்குகிறேன்.
பிரம்மநிலை பெற்றோன், ஆனந்தமுடையோன், துயரற்றோன், விருப்பற்றோன், எல்லா உயிர்கைளையும் சமமாக நினைப்போன், உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான். – 18:54
யான் எவ்வளவுடையோன், யாவன் என என்னையொருவன் உள்ளபடி பக்தியாலே அறிகிறான். என்னை உள்ளபட அறிந்துகொண்ட பின்னர் 'தத்' (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான். – 18:55
எல்லாத் தொழில்கைளயும் எப்போதும் செய்து கொண்டிருந்தாலும், என்னையே சார்பாகக் கொண்டோன் எனதருளால் அழிவற்ற நித்திய பதவியை எய்துகிறான். – 18:56
அறிவினால் செயல்கைளெயல்லாம் எனக்கெனத் துறந்துவிட்டு, என்னிடத்தே ஈடுபட்டு, புத்தி யோகத்தில் சார்புற்று, எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு. – 18:57
என்னைச் சித்தத்தில் கொண்டிருப்போனாய் எல்லாத் தடைகளையும் எனதருளால் கடந்து செல்வாய், அன்றி நீ அகங்காரத்தால் இதைனக் கேளாது விடுவாயெனில் பெரிய நாசத்தை அடைவாய். – 18:58
நீ அகங்காரத்தில் அகப்பட்டு “இனிப் போர் புரியேன்” என்ற துணிவு பொய்மைப்பட்டுப் போம். இயற்கை உன்னைப் போரிற் பிணிக்கும். – 18:59
இயற்கையில் தோன்றிய ஸ்வகர்மத்தால் கட்டுண்டிருக்கும் நீ மயக்கத்தால் அதனைச் செய்ய விரும்பாயெனினும், தன் வசமின்றியேனும் அதைச் செய்வாய். – 18:60
அர்ஜுனா! எல்லா உயிர்களுக்கும் ஈசன் உள்ளத்தில் நிற்கிறான்; மாயையால் அவன் எல்லா உயிர்களையும் சக்கரத்திலேற்றிச் சுழற்றுகிறான். – 18:61
பாரதா! எல்லா வடிவங்களிலும் அவனையே சரணெய்து. அவன் அருளால் பரம சாந்தியாகிய நித்திய ஸ்தானத்தை எய்துவாய். – 18:62
இங்கனம் ரகசியத்திலும் ரகசியமான ஞானத்தை உனக்குரைத்தேன். இதனை முற்றிலும் ஆராய்ச்சி செய்து எப்படி இஷ்டமோ அப்படிச் செய். – 18:63
18:54 இலிருந்து 18:63 வரை உள்ள பாடல்களுக்கு மகாகவி பாரதியாரின் உரைகளைப் பார்த்தோம்.
அஃதாவது, சுருக்கமாக, (நான்) சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டேன்; கேட்டால் நன்மை; கேட்காமல் போனால் அழிவு நிச்சயம்; நான் சொன்ன கருத்துகளை நன்றாக ஆராய்ந்து உன் விருப்பம் எப்படியோ அப்படிச் செய் என்று சொல்லி முடிக்கிறார்.
இருப்பினும், அவருக்கு அர்ஜுனன் மேல் நம்பிக்கை இல்லை போலும். மீண்டும் தொடர்கிறார்!
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.

Comments