top of page

21/01/2025, பகவத்கீதை, பகுதி 161

mathvan

அன்பிற்கினியவர்களுக்கு:

17:23-27 பாடல்களுக்கு மகாகவி பாரதியாரின் உரையை அப்படியே அளித்துவிடுகிறேன்.


மகாகவி பாரதியார் உரை:


ஓம் தத் சத் என்ற மும்மைப் பெயர் பிரம்மத்தைக் குறிக்குமென்பார். அதனால் முன்பு பிரமாணங்களும், வேதங்களும், வேள்விகளும் வகுக்கப்பட்டன. – 17:23


அதனால், பிரம்மவாதிகள் விதிப்படி புரியும் வேள்வி, தவம், தானம் என்ற கிரியைகள் எப்போதும் ‘ஓம்’ என்று தொடங்கிச் செய்யப்படுகின்றன. – 17:24


‘தத்’ என்ற சொல்லை உச்சரித்துப் பயனைக் கருதாமல், பல வகைப்பட்ட வேள்வியும் தவமும் தானமுமாகிய கிரியைகள் மோக்ஷத்தை விரும்புவோரால் செய்யப்படுகின்றன. – 17:25


‘சத்’ என்ற சொல் உண்மையென்ற பொருளிலும் நன்மையென்ற பொருளிலும் வழங்கப்படுகிறது. பார்த்தா, புகழ்தற்குரிய செய்கையைக் குறிப்பதற்கும் ‘சத்’ என்ற சொல் வழங்குகிறது. – 17:26


வேள்வி, தவம், தானம் இவற்றில் உறுதி நிலையும் ‘சத்’ எனப்படுகிறது. பிரம்மத்தின் பொருட்டாகச் செய்யும் கர்ம மும் ‘சத்’ என்றே சொல்லப்படும். – 17:27


இவ்வாறாக மகாகவி உரை சொல்லிச் செல்கிறார். விருப்பமுள்ளவர்கள் ஆராய்ந்து அறியவும்.


இங்கனம் சிரத்தாத் திரய விபாக யோகம் என்னும் பதினெழாம் அத்தியாயம் முற்றிற்று.


பகவத்கீதையின் இறுதி அத்தியாயமான மோக்ஷ சந்நியாச யோகமெனப்படும் பதினெட்டாம் அத்தியாயத்திற்குள் நுழைவோம். மொத்தம் 78 பாடல்களைக் கொண்ட நீண்ட அத்தியாயம் இது!


மோக்ஷம் என்றால் வீடு. பிறவாமையை வேண்டி அமைதியாக இந்த உலகை விட்டு நீங்குவது வீடு.


பாடல் 5:17 இல், இவ்வாறு இயற்கையில் ஒன்றிப் பற்றுகளை உதறித் தள்ளுபவர்கள் அமைதியை எய்துகிறார்கள். பிறவாமை என்னும் பெரும் பேற்றை எய்துகிறார்கள் என்றார். காண்க 01/11/2024, பகவத்கீதை, பகுதி 77.


சந்நியாசம் குறித்துப் பல குறிப்புகளைப் பார்த்துள்ளோம். முதலாவதாக ஆச்சிரமங்கள் நான்கினுள் ஒன்று சந்நியாசம் என்று பார்த்தோம். அஃதாவது, பிரம்மச்சரியம்; கிருகஸ்தம், சந்நியாசம்; வானப்பிரஸ்தம் என நான்கு ஆச்சிரமங்கள். காண்க 21/09/2024, பகவத்கீதை, பகுதி 37.

 

சந்நியாசத்தின் வரைவினைப் (Definition) பாடல் 4:41 இல் தெரிவித்திருந்தார். காண்க 21/10/2024, பகவத்கீதை, பகுதி 67.


மீள்பார்வைக்காக:

தனஞ்ஜயா, ஞானத்தால் ஐயத்தை அறுத்துத் (ஞானம்), தன்னைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டுச் செயல்களைச் செய்பவனைக் (கர்மம்), அச்செயல்களின் விளைவுகளில் பற்றுகளை விடுத்து (சந்நியாசம்), இவ்வழியிலியே பொருந்தி இருப்பவனைக் (யோகம்), கர்மத் தளைகள் கட்டுப்படுத்தா. – 4:41


மேலும் சந்நியாசம் மூவகைப்படும் என்றும் சிந்தித்துள்ளோம். காண்க 23/10/2024, பகவத்கீதை, பகுதி 69.


அஃதாவது, ஒன்று கொள்கைக்காகச் சந்நியாசம் கொள்வது; இரண்டாவது வகை என்னவென்றால் இயலாமையால் சந்நியாசம் போவது; மூன்றாவது வகையானது அப்பொழுதைக்கு அப்பொழுது “சீ சீ இந்தப் பழம் புளிக்கும்” என்று செயல்களில் இருந்து விலகி நிற்பது!


மூன்றாவது வகை சந்நியாசத்தைத்தான் பரமாத்மா தவிர்க்கச் சொல்கிறார் என்றும் சிந்தித்தோம்.


மேலும், பாடல் 17:25 இல், ‘தத்’ என்ற சொல்லை உச்சரித்துப் பயனைக் கருதாமல், பல வகைப்பட்ட வேள்வியும் தவமும் தானமுமாகிய கிரியைகள் மோக்ஷத்தை விரும்புவோரால் செய்யப்படுகின்றன என்றும் ஒரு குறிப்பினைப் பார்த்தோம். காண்க  20/01/2025, பகவத்கீதை, பகுதி 160.


ஆக, வீட்டுப் பேறு, சந்நியாசம் குறித்த சிந்தனைகளை விளக்கிப் பகவத்கீதையை நிறைவு செய்யும் பகுதிதான் மோக்ஷ சந்நியாச யோகமாக இருக்க வேண்டும்.


இருப்பினும், இந்த அத்தியாயத்தில் உள்ள பல பாடல்கள், குணத்திரய விபாக யோகமென்னும் பதினான்காம் அத்தியாயத்தில் சொன்ன செய்திகளை மீள்பார்வை பார்ப்பதாக உள்ளன! மேலும் சில பாடல்கள் பன்னிரண்டாம் அத்தியாயமான பக்தி யோகத்தில் சொன்ன கருத்துகளையும் மீண்டும் வலியுறுத்துவதாக அமைந்துள்ளன!

 

நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.





 

4 views

Comentários


bottom of page