அன்பிற்கினியவர்களுக்கு:
பயனைக் கருதிக் கொடுப்பதும், இதனைக் கொடுத்தால் அதனைப் பெறலாம் என்று கணக்குக் போட்டுக் கொடுத்தலும், மனத்தில் மகிழ்ச்சியில்லாமல் கொடுத்தலும் இராசசத் தானம் எனப்படும். – 17:21
தகுதியற்ற இடங்களிலும், தகுதியற்ற காலங்களிலும், தகுதியற்றவர்களுக்கு, எந்தவித மரியாதையுமில்லாமல் அள்ளி இறைப்பது தாமசத் தானமெனப்படும். – 17:22
இவ்வாறு, ஆகாரம், யக்ஞம், தவம், தானம் என்னும் நான்கினை முக்குணங்களின் வழிப் பகுத்தார்.
இந்த அத்தியாயத்தில் மொத்தம் இருபத்தெட்டு (28) பாடல்கள். இருபத்திரண்டு பாடல்களில் நான்கு பண்புகளை முக்குணங்களைக் கொண்டு பகுத்துச் சொன்னார். இருபத்தெட்டாம் பாடலான இறுதிப் பாடலில் சிரத்தையின் சிறப்பைக் கூறி நிறைவு செய்கிறார்.
இடையில் உள்ள ஐந்து பாடல்கள் இடையீடாக அமைந்துள்ளது. முதலில் முடிவுரையைப் பார்த்துவிட்டு அந்த இடையீட்டைப் பார்க்கலாம்.
சிரத்தியின்றிச் செய்யப்படும் ஆகாரம் (உள்ளீடுகள்), யக்ஞம் (வழிமுறைகள்), தவம் (செயல்கள்), தானம் (பகுத்துண்டு வாழ்தல்) எதுவாயினும் அவை “அசத்”. (அசத் என்றால் எந்தப் பொருளும் இல்லை என்று பொருள்). அர்ஜுனா, அவை இம்மைக்கும் உதவா, மறுமைக்கும் உதவா. – 17:28
சத் என்றால் உண்மை, உண்மைப் பொருள், என்றும் இருப்பது, நல்லது என்றெல்லாம் பொருள்படும்.
அசத் என்றால் உண்மையில்லை, நேர்மையில்லை, அழிவிற்கு ஆட்பட்டது, தீயது எனப் பொருள்படும்.
நாம் மனம் மொழி, மெய்களால் செய்யும் அனைத்தும் சிரத்தையுடன் செய்தல் வேண்டும். அந்தச் சிரத்தையும் குணக்கோளாறுகளுக்கு ஆட்படாமல் இருக்க வேண்டும். நன்மை பயக்கும் வகையினில் இருத்தல் வேண்டும். அப்படியிருப்பின் அவை அழியாமல் நிலைக்கும் என்று சொல்லி இந்த அத்தியாயத்தினை முடிக்கிறார்.
எந்தக் காரணத்தினாலோ ஐந்து பாடல்கள் இடையில் இணைக்கப்பட்டுள்ளன. சத், அசத் குறித்துச் சொல்வதற்காகவும் இருக்கலாம்!
அது என்ன இவ்வளவு நீட்டுகிறாயே என்று கேட்கிறீர்களா?
இதோ சொல்கிறேன். இந்த ஐந்து பாடல்கள் (17:23-27) “ஓம் தத் சத்” என்னும் தொடரின் விளக்கத்தினை அளிக்கின்றது.
“ஓம் தத் சத்” என்னும் தொடரினைப் பல இடங்களில் பயன்படுத்துகின்றனர்.
ஓம் என்னும் எழுத்து ஒரு கூட்டெழுத்து. எப்படி “ஒள” என்னும் எழுத்து அகர வகரத்தின் (அவ்) கூட்டெழுத்தோ, “ஐ” என்னும் எழுத்து அகர யகரத்தின் (அய்) கூட்டெழுத்தோ அவ்வாறு.
ஓம் என்பது அகர உகர மகரத்தின் கூட்டு என்கிறார் திருமூலர் பெருமான். இந்த ஓம் என்னும் எழுத்தினை மிகவும் விரித்துப் பல பாடல்களில் விளக்கியுளார் திருமந்திரத்தில்.
ஓம் என்னும் ஒலி பிரணவ ஒலி என்கிறார்கள். அஃதாவது, முதன்மை ஒலி, புதிய ஒலி என்கிறார்கள். இயற்கையில் இணைந்திருக்கும் ஒலியும் இதுவே என்கிறார்கள். ஓம் என்பது அசபா மந்திரம் என்கிறார்கள். அசபா என்றால் நாம் எதனையும் அசைக்காமல் எழும் ஒரு நுண்ணிய ஒலி என்று பொருள்.
தத் என்றால் அது என்று பொருள். சத் என்றால் உண்மை, அழிவற்றது என்று பார்த்தோம்.
இந்த ஐந்து பாடல்களில் (17:23-27) கீதையின் ஆசிரியர் சொல்லியிருப்பதற்கு மகாகவி பாரதியாரின் உரையை நாளைப் பார்க்கலாம்.
நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments