14/01/2025, பகவத்கீதை, பகுதி 154
- mathvan
- Jan 14
- 2 min read
அன்பிற்கினியவர்களுக்கு:
அருட்கொடைகள் மற்றும் மருட்கொடைகளின் இயல்புகளைச் சொல்லிக் கொண்டு வருகிறார் கீதாச்சாரியன்.
பார்த்தா, இந்த உலகில் உயிர்களின் இயல்புகளை (பெரும்பான்மை கருதி) இரு பிரிவாகப் பிரிக்கலாம். அருளின் பாதையில் பயணிப்பவர்கள். இவர்கள் தெய்வத்திற்கு இணையானவர்கள். இவர்கள் ஒரு பிரிவு. அடுத்துக் கெடுக்கும் கெடுமதியாளர்களாக விளங்கும் கொடூரர்கள் மற்றொரு வகையினர். முதல் வகையினரின் இயல்புகளைச் சற்று விரிவாகவே எடுத்துரைத்தேன். இனி அந்தக் கெடுமதியாளர்களைக் குறித்து விரிவாகச் சொல்லப்போகிறேன் அர்ஜுனா. – 16:6
கெடுமதியாளர்களிடம் நல்லன, தீயன என்றெல்லாம் பகுத்தறியும் தன்மை இருக்காது. அவர்களிடம் மனத்தூய்மையும், உண்மையும், நன்நடத்தையும் இருக்கா. – 16:7
அவர்கள் இந்த உலகமே சூழ்ச்சிகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும், உயர்ந்த தன்மை என்ற ஒன்று கிடையாது என்றும் இந்த உலகின் பெருக்கம் காமத்தை அடிப்படையாகக் கொண்டு ஆண் பெண் சேர்க்கையால் விளைந்தது என்றும் உறுதியாகப் பேசுவர். – 16:8
அவர்கள் தங்கள் கீழ்த்தரமான எண்ணங்களைக் கெட்டியாகப் பர்றிக்கொண்டு நல்வழிப் பாதையை மறந்து மறுத்துக் கொடுந்தொழில்களைப் புரிந்து இந்த உலகிற்குப் பகைவர்களாய் நாசத்தை விளைவிக்க வந்தவர்களைப் போன்றே இருக்கின்றனர். – 16:9
அடக்கமுடியாப் பேராசையைப் பற்றிக்கொண்டு, ஆணவம், தற்பெருமை, அகங்காரம் உள்ளிட்டவைகளை பண்புகளாகக் கொண்டு, தாம் மட்டுமே உயர வேண்டும் என்ற தீய எண்ணங்களையே தங்களின் அடிநாதமாகக் கொண்டு தம் செயல்களை வடிவமைத்துக் கொள்கின்றனர். – 16:10
இந்த உலகம் அழிந்தாலும் அழியா ஆசைகளை தங்கள் நெஞ்சங்களில் இருத்திக் கொண்டு அவை அவ்வாறுதான் இருக்கும் என்று நிச்சயித்துக் கொண்டு நூற்றுக் கணக்கான ஆசைக் கயிறுகளால் கட்டப்பட்டு (ஆட்டி வைக்கப்படும் பொம்மைகளைப் போல) மோகத்திற்கும் காமத்திற்கும் அடிமையாகிப் பொருள் ஈட்டுவது ஒன்றே குறி என்று பொருளினைச் சேர்த்துக் குவித்துக் கொள்ள எண்ணுவர். – 16:11-12
“இன்னும், இன்னும்…” என்னும் எண்ணங் கொண்டவர்களாய், இவை இருக்கின்றன, அவற்றைப் பிடிக்கப் போகிறேன், மேலும் எனக்கு அந்தப் பொருளும்கூட வரப்போகின்றது, அந்தப் பகைவன் ஒழிந்தான், இதோ மீதம் இருப்பவர்களையும் அழிக்கப் போகிறேன்! நானே உயர்ந்தவன்; நானே அனைத்துச் சுகங்களையும் அனுபவிக்கத் தகுதி பெற்றவன், எடுத்தக் காரியங்களிலெல்லாம் வெற்றி பெற்று அவற்றை அனுபவிக்கும் தகுதியுள்ளவன். – 16:13-14
“நானே பெரும் பணக்காரன், நானே உயர் குலம், எனக்கு ஈடு இணை யாரும் இல்லை, எனக்குச் சமமானவன் யார்? நானே யாகங்கள் செய்வேன், தானமும் செய்வேன், மிகவும் மகிழ்ந்திருப்பவனும் நானே என்று (தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு) மயக்கத்தில் கட்டுண்டவர்களாய் இத்தகைய பல நினைப்புகளால் மனம் அலைபாய பேராசை வலையில் மீண்டும் மீண்டும் சிக்கிப் புலன் நுகர்ச்சிகளே முதல் என்று பயணித்துத் துன்பமென்னும் நரகில் வீழ்வர். – 16:15-16
தம்மையே மெச்சிக் கொண்டு பெரியாரிடத்தில் பணிவில்லாதவராய்ச் செல்வச் செருக்கும் மதமும் படைத்தவராய், வீண் ஆரவாரத்திற்காகப் பல நல்ல செயல்களைச் (வேள்விகளும் யாகங்களும் உள்ளிட்டன) செய்பவர் போலக் காட்ட முயல்கின்றனர். (முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல) முறை தவறி நடக்கின்றனர். – 16:17
எல்லா உருவங்களிலும் பரவி நிற்கும் என்னைப் பகைப்பவர்களாய், நல்லவர்களைக் கண்டு சகியாதவர்களாய், அகங்காரம், அதிகார பலம், கருவம், பேராசை, வஞ்சம் உள்ளிட்டவைகளை தங்கள் இயல்பாகக் கொண்டிருப்பர், - 16:18
எப்பொழுதும் கொடிய எண்ணங்களையே தங்கள் செயல்களுக்கு அடிப்படையாகக் கொண்டு செயல்படும் மனிதப் பதர்களும் மானுட விரோதிகளும் மீண்டும் மீண்டும் (நரகத்தில்) வீழ்ந்து இழிபிறப்பாகவே தள்ளப்படுவர். – 16:19
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.

Comments